×

செயல்படாத டபுள் இன்ஜின்

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ ஆட்சி அமைந்த பிறகு, நாடு முழுவதும் அக்கட்சி மீது ஒரு எதிர்பார்ப்பை செயற்கையாக உருவாக்கி மோடி இந்தியாவில் மட்டுமல்ல உலக தலைவர்களால் கொண்டாடப்படும் அரிதான தலைவர் என்பது போல் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தினர். ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு ஏழைகளை பரம ஏழைகளாக்கிவிட்டது. கோடீஸ்வரர்களை மகா கோடீஸ்வரர்களாக மாற்றியது மட்டுமே சாதனை.
இதையடுத்து மோடியின் செல்வாக்கை பயன்படுத்தி மாநிலங்களில் உள்ள கட்சிகளை உடைத்து தேர்தல் மூலம் சில மாநிலங்களிலும் புறவாசல் வழியாக சில மாநிலங்களிலும் பாஜ ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி கொண்டது. உடனே, டபுள் இன்ஜின் ஆட்சியால் மட்டுமே மாநிலங்களில் வளர்ச்சி திட்டங்கள் சிறப்பாக நடைபெறும் என்று மார்தட்டிக்கொண்டது.

இப்படி டபுள் இன்ஜின் ஆட்சி நடைபெறும் மாநிலம் தான் மணிப்பூர். அம்மாநிலத்தில் தற்போதைய நிலை என்னவென்பது உலகமே அறியும். மெய்டீஸ், குக்கி சமூகத்தினரிடையே வெடித்த மோதல், வன்முறையாக மாறி இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்தி பலாத்காரம் செய்த கொடூரம் தான் அரங்கேறியுள்ளது. இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் மணிப்பூருக்கு நேரில் சென்று கள நிலவரத்தை ஆய்வு செய்து ஆளுநரை சந்தித்து அம்மாநிலத்தில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுத்தனர்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்த வலியுறுத்தி வருகின்றனர். ஜனாதிபதியை எதிர்க்கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து மணிப்பூர் மாநில நிலவரம் குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். மணிப்பூரில் இப்படி டபுள் இன்ஜின் ஆட்சி செயல்படாமல் பழுதாகி நின்றுவிட்டது. இது ஒருபுறமிருக்க அடுத்ததாக அரியானா மாநிலத்தில் விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. கல்வீச்சுகள், துப்பாக்கி சூடு என்று அம்மாநிலம் அமைதியிழந்து காணப்படுகிறது.

வன்முறை அடுத்தடுத்த மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது. மத்திய பாதுகாப்பு படை மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஒவ்வொருவரையும் பாதுகாக்க போலீசாரால் முடியாது. எனவே மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். அரியானா வன்முறை சம்பவம் தொடர்பாகவும் ஒன்றிய அரசு இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை. அம்மாநிலத்திலும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பாஜ ஆளும் மாநிலங்கள் ஒவ்வொன்றாக இந்தியாவில் இருந்து துண்டிக்கப்பட்டு வருகிறது.

உளவுத்துறை அளித்த எச்சரிக்கையை மாநில அரசு அலட்சியப்படுத்தியதும் வன்முறைக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. சிறுபான்மையினர் வசிக்கும் பகுதியில் யாத்திரை நடத்த அனுமதி வழங்கும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளாமல் முழு தோல்வி அடைந்துள்ளது. அரியானாவிலும் டபுள் இன்ஜின் ஆட்சி செயல்படாமல் பழுதாகிவிட்டது. இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமலேயே எதிர்கட்சிகளை வெளியே அனுப்பிவிட்டு பாஜ அரசு மசோதாக்களை நிறைவேற்றிக்கொள்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் அதிருப்தி வெளிப்படுத்தி வருகின்றனர்.

The post செயல்படாத டபுள் இன்ஜின் appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,Modi ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக...